இந்தியாவில் வணிக விரிவாக்கத்திற்கு 40% பன்னாட்டு நிறுவனங்கள் திட்டம்; உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதால், ஒவ்வொரு ஐந்து பன்னாட்டு நிறுவனங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (40 சதவீதத்திற்கும் மேல்) இந்தியாவில் தங்கள் வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அதிக முதலீடு மற்றும் வணிகத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முன்னிலையில் உள்ளன. இது குறித்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் சுனில் கௌஷல் கூறுகையில், “உலகளாவிய வர்த்தக வளர்ச்சி சிறிது தடைபட்டாலும், வளரும் பொருளாதாரங்களில் பெருகி வரும் செழிப்பு, புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இந்தியாவின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாகவும், வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) மையங்கள், உலகளாவிய திறன் மையங்களாக (GCCs) உருவெடுத்துள்ளது பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.