பண்டிகை கால விற்பனையில் 35% வளர்ச்சி; வாடிக்கையாளர்கள் ஆன்லைன் டீல்களுக்காகக் காத்திருந்ததால் ஆஃப்லைன் விற்பனை சரிவு!
புதுடில்லி, செப்டம்பர் 26: பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வழங்கப்படும் அதிரடித் தள்ளுபடிகள் மற்றும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற காரணங்களால், ஆன்லைன் விற்பனை அமோக வளர்ச்சியை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, ஆஃப்லைன் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டேட்டம் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் மீனா, “இந்த ஆண்டு பண்டிகை காலத்தின் முதல் இரண்டு நாட்களில் இ-காமர்ஸ் விற்பனையின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 32 முதல் 35 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கடந்த ஆண்டை விட 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய மொபைல் ரீடெய்லர்ஸ் சங்கத்தின் தலைவர் கைலாஷ் லக்யானி கூறுகையில், “ஆன்லைனில் கிடைக்கும் டீல்களுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்ததால், ஸ்மார்ட்போன்களின் ஆஃப்லைன் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது” என்றார். இ-காமர்ஸ் தளங்களுக்காக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தலா 2 மில்லியன் யூனிட்களை வழங்கியுள்ளதாகவும், பிற நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து 3 முதல் 4 மில்லியன் யூனிட்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.