நான்கு ஆண்டு காதல்: வீட்டை விட்டு வெளியேறி திருமணம்; காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்; காதல் ஜோடியை அழைத்து சமரசம் பேசிய போலீசார்!
சேலம், செப்டம்பர் 25: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்த காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது. இதையடுத்துப் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் (30) என்பவரும், அம்மாபேட்டையைச் சேர்ந்த சமீம் (21) என்பவரும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தனர். சமீமின் வீட்டில் இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும், அவரது குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால், கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி சமீம் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, நேற்று வெள்ளாளப்பட்டியில் உள்ள சிவன் கோவிலில் மதியழகன், சமீமை திருமணம் செய்துகொண்டார். பின்னர், தங்கள் பெற்றோரால் ஆபத்து ஏற்படும் என அஞ்சிய அவர்கள், பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடியை அழைத்து விசாரித்த போலீசார், இரு வீட்டாரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசி, பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.