சர்வதேச கூலி என எழுந்த குற்றச்சாட்டுகள்; என் உழைப்புப் பணத்தில் தான் உதவி செய்கிறேன் என வீடியோ வெளியீடு!
நகைச்சுவை நடிகர் KPY பாலா, தான் ஏழை மக்களுக்குச் செய்து வரும் உதவிகள் குறித்து எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். தனது உதவிகளைச் சிலர் உதவி உருட்டுகள் என்றும், தான் சர்வதேச கூலி என்றும் பேசியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எழுந்த குற்றச்சாட்டுகள்:
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பத்திரிகையாளர் உமாபதி அளித்த பேட்டியில், KPY பாலாவுக்கு உண்மையிலேயே உதவும் மனப்பான்மை உள்ளது. ஆனால், அவர் அளிக்கும் ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் போன்ற உதவிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார். அவர் ஒரு சர்வதேசக் கூலியா என்ற சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், ஆம்புலன்ஸின் பதிவு எண் மறைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், அது திருட்டு ஆம்புலன்ஸாகவோ அல்லது இன்சூரன்ஸ் இல்லாத வாகனமாகவோ இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
பாலா அளித்த விளக்கம்:
இதற்குப் பதிலளிக்கும் வகையில், KPY பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யார் இந்த பாலா? பாலா சர்வதேசக் கைக்கூலி, அவன் வாழ்க்கை முடிந்தது எனப் பலர் சில நாட்களாக வீடியோ போட்டு வருகிறார்கள். ஒரு படம் நடித்ததற்காக இவ்வளவு வன்மத்துடன் செயல்படுவார்கள் என எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
வாகனங்கள்: ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு எண்ணில் DD என எழுத்துப்பிழை இருந்ததாகவும், அது பின்னர் D என மாற்றப்பட்டு பயன்பாட்டில் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும், தனது உதவி மூலம் பைக் வாங்கிய பயனாளர் ஒருவரும், பைக் பயன்பாட்டில் உள்ளதாக வீடியோவில் உறுதிப்படுத்தினார்.
பண ஆதாரம்:
நான் திரைப்படம் நடிக்கிறேன், நிகழ்ச்சிகளை நடத்துகிறேன், வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் உதவி செய்கிறேன். எனக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாகச் சொல்கிறார்கள். என்னிடம் அறக்கட்டளை கிடையாது, நான் மக்களிடம் நிதி வசூல் செய்வதில்லை. இரவு பகலாக நான் உழைக்கும் பணத்தை வைத்தே உதவி செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை திட்டம்: ஒரு வீடு கட்டும் இடத்தில், சிறிய கிளினிக் கட்ட நினைத்தேன். அதற்காக இவ்வளவு பிரச்சினை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கோடி ரூபாய் வீடு கட்டியிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது என்றும் சிலர் கூறுகிறார்கள்" என அவர் வேதனை தெரிவித்தார்.
நல்லது செய்ய நினைத்ததற்கே இவ்வளவு பிரச்சினை இருப்பதாகவும், எதற்கும் தான் பயந்து ஓட மாட்டேன் எனவும், தனக்காக மக்கள் இருப்பதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு உழைப்பேன் எனவும் பாலா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.