9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; குற்றத்தை மூடிமறைக்க முயற்சி; போலீசார் அதிரடி நடவடிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் தங்கிப் படித்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அந்தச் சம்பவத்தைப் பணம் கொடுத்து மூடிமறைக்க முயன்ற பாதிரியார் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
ஓசூர், மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமிக்கு, காப்பகத்தின் தாளாளரான 63 வயது ஷ்யாம் கணேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, சிறுமியின் தாயாருக்கு காப்பகத்தில் இருந்து போன் செய்து, மகளின் உடல்நிலை சரியில்லை எனத் தெரிவித்துள்ளனர். மகளைப் பார்க்கச் சென்ற தாய், சோர்வுடன் இருந்த சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் மகளிடம் கேட்டபோது, காப்பகத்தின் தாளாளர் ஷ்யாம் கணேஷ் தவறாக நடந்துகொண்டதை அவர் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தாய், தனது உறவினர்களுடன் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காப்பகத்திற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார்.
கட்டப்பஞ்சாயத்து முயற்சி
அப்போது, ஷ்யாம் கணேஷின் அழைப்பின் பேரில் அங்கு வந்த பாதிரியார் செல்வராஜ் மற்றும் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் நாதமுரளி ஆகியோர், சிறுமியின் தாயிடம் சமரசம் பேசியுள்ளனர். இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருக்க, 6 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி, முதலில் 1 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், மறுநாள் 17ஆம் தேதி, மீதமுள்ள 5 லட்சம் ரூபாயைக் கேட்க நாதமுரளி, ஷ்யாம் கணேஷை சந்தித்துள்ளார். பணம் கொடுக்க மறுத்த ஷ்யாம் கணேஷ், தானே நேரில் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசாரின் விசாரணை
ஷுயாம் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஷ்யாம் கணேஷ் ஒப்புக்கொண்டார். மேலும், அவரது மனைவி ஜோஸ்பின், பாதிரியார் செல்வராஜ், ஆசிரியை இந்திரா மற்றும் நாதமுரளி ஆகியோர் இந்தச் சம்பவத்தைப் பணம் கொடுத்து மூடிமறைக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், காப்பகத்தின் தாளாளர் ஷ்யாம் கணேஷ், அவரது மனைவி ஜோஸ்பின், பாதிரியார் செல்வராஜ், ஆசிரியை இந்திரா, நாதமுரளி என மொத்தம் ஐந்து பேரையும் ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அந்த காப்பகத்தில் இருந்த மற்ற குழந்தைகளும் மீட்கப்பட்டு, அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.