தமிழகத்தில் பேரிடர் காலப் பணியில் முக்கியப் பங்கு வகித்தவர்; 56 வயதில் திடீர் மறைவு - அரசு வட்டாரங்களில் சோகம்!
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 56. ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
சென்னையில் பிறந்த பீலா வெங்கடேசன், தனது பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். அதன் பின் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று, செங்கல்பட்டு துணை ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கினார். மீன்வளத்துறை இயக்குநர், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் இயக்குநர், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும், பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பீலா வெங்கடேசன், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, அரசின் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினார். கொரோனா பாதிப்புகள், உயிரிழப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
தொடர்ந்து, பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பீலா வெங்கடேசனின் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மருத்துவரான பீலா வெங்கடேசன் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல முக்கியத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சவால் மிகுந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெற்றிருந்த நிலையில், அவரது மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.