களைப்பு தெரியாமல் இருக்க பாரம்பரியப் பாடல்களைப் பாடி உற்சாகமாகப் பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள்!
ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி` என கிராமியப் பாடல்களைப் பாடியபடி, ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாய் பாசனப் பகுதியில் விவசாயிகள் உற்சாகமாக நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வயல்களில் தொழிலாளர்கள் கூட்டம் களைகட்டி உள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனக் கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ஆம் தேதி முதல்போகப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் நிலங்களை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது, ஈரோடு மாவட்டம் முழுவதும் கீழ்பவானி கால்வாய் பாசனப் பகுதியான சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், திங்களூர், பெருந்துறை, நசியனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வயல்களில் நீர் நிரம்பியிருக்க, நாற்று நடும் தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை செய்யும் போது உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க, நெல் நடவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பாரம்பரிய கிராமியப் பாடல்கள் மற்றும் பழைய சினிமாப் பாடல்களைப் பாடி, உற்சாகமாகப் பணியைத் தொடர்கின்றனர். உழைப்பும், பாடலும் இணைந்த இந்தச் சூழல், நல்ல விளைச்சலுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.