டார்க் வெப் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண்! சென்னை, குஜராத் வழக்குகளில் சிக்கிய இளம் பெண் ரினே ஜோஸ்லிடா!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துப் பெரும் பீதியை ஏற்படுத்திய இளம் ஐடி பெண் ஊழியர், மீண்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கணவனைப் பழிவாங்கும் நோக்கத்துடன், இந்த வெடிகுண்டு மிரட்டல்களை ரகசியமான 'டார்க் வெப்' இணையதளம் மூலம் விடுத்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழப்பதற்குத் தான் காரணம் எனக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியது, நரேந்திர மோடி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என அந்த மிரட்டல்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, 12 மாநிலங்களின் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
இந்த வழக்குகளில் தொடர்புடைய, அகமதாபாத்தைச் சேர்ந்த ரினே ஜோஸ்லிடா என்ற இளம் பெண் ஐடி ஊழியரை, கடந்த ஜூன் 24 ஆம் தேதி குஜராத் காவல்துறையினர் சென்னை கேகே நகரில் வைத்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவருடைய முன்னாள் கணவர் திவிச் பிரபாகர் என்பவரைப் பழிவாங்கும் நோக்கில், அவருடைய பெயரிலேயே ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தி இந்த மிரட்டல்களை விடுத்தது அப்போது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையிலும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்ததால், இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட ரினே ஜோஸ்லிடாவிற்கும் சென்னையின் மிரட்டல்களுக்கும் தொடர்பு உள்ளதா என ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட பிற மிரட்டல்களுக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்திற்கு மட்டும் மூன்று முறை தனது முன்னாள் கணவரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குஜராத் சென்று அங்குச் சிறையில் இருந்த ரினே ஜோஸ்லிடாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனது முன்னாள் கணவரைப் பழிவாங்குவதற்காகவே குஜராத்தில் இருந்து சென்னைக்கு மாறுதல் பெற்று வந்ததாகவும், இங்கு வந்த பிறகு 'டார்க் வெப்' முறையைப் பயன்படுத்தி, கணவர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐந்து நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை மீண்டும் கைது செய்து குஜராத் அழைத்துச் சென்று அங்குச் சிறையில் அடைத்தனர். இந்த இளம் பெண் இதுவரை பெங்களூர், ஹதராபாத், குஜராத், தமிழ்நாடு மற்றும் டெல்லி என மொத்தம் 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.