செப்டம்பர் 27 வரை மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் 27-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இதேபோன்ற மழை தொடரும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸ் வரையிலும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, இன்றும், நாளை முதல் 23-ஆம் தேதி வரையிலும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும், எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.