மனைவியுடன் நின்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மீது ரோடு ரோலர் ஏறிப் பரிதாபமாக உயிரிழந்தார்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் சாலை அமைக்கும் பணியின்போது கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர், தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மீது ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
சென்னை கோயம்பேடு சிவன் கோவில் வடக்கு மாட வீதியில் மாநகராட்சி சார்பில் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் ராஜா (54) என்ற மாற்றுத்திறனாளி, தனது மனைவி சாந்தலட்சுமியுடன் பைக்கில் வந்தவர், விநாயகர் கோயில் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து பாஸ்கர் ராஜாமீது மோதியது. மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் உடனடியாக விலகிச் செல்ல முடியவில்லை. ரோடு ரோலர் அவர் உடல்மீது ஏறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்துகுறித்து கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ரோடு ரோலர் ஓட்டுநர் வெங்கடேசன் தப்பி ஓடிவிட்டார். சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பாலாஜி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.