மீஞ்சூர் அருகே வெல்டிங் பணியின் போது விபத்து; உயிர் சேதம் இல்லை எனத் தகவல்!
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வெல்டிங் பணி நடைபெற்றபோது, பெட்ரோல் லாரி ஒன்றின் டேங்கர் பகுதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த டேங்கரில் பெட்ரோல் எதுவும் இல்லாததால், உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம், வெல்டிங் பணியின்போது போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததே என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.