போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை!
குரோம்பேட்டை சி.எல்.சி ஒர்க்ஸ் சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த சாலையோரக் கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. அப்போது, கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், தகர சீட்டுகள் அமைத்து 10-க்கும் மேற்பட்ட கடைகள் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து இயங்கி வந்தன. இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மாநகராட்சிக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து, ஏழு நாட்களுக்குள் இந்தக் கடைகளை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
நோட்டீஸ் வழங்கப்பட்டும் கடைகள் அகற்றப்படாத நிலையில், இன்று இரவு அதிரடியாகக் கடைகள் அகற்றப்பட்டன. அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் உதவியுடன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.