12 மாநிலங்களின் வருவாய் குறைந்தது; சம்பளம், ஓய்வூதியச் செலவுகள் 10 ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரிப்பு எனவும் தகவல்!
இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் (சிஏஜி) அமைப்பு, கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் பற்றாக்குறையில் தமிழகம், நாடு அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 12 மாநிலங்களின் வருவாய் குறைந்திருக்கிறது. இதில், ஆந்திரா (ரூ.43,488 கோடி) முதல் இடத்திலும், தமிழகம் (ரூ.36,215 கோடி) இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளன. இது, மாநிலங்களின் நிதி மேலாண்மை குறித்து கவலை அளிப்பதாக உள்ளது.
மேலும், கடந்த 2013-14 முதல் 2022-23 வரையிலான 10 ஆண்டு காலத்தில், மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலவுகள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில், மொத்த வருவாய் செலவினமான ரூ.35.95 லட்சம் கோடியில், உறுதியளிக்கப்பட்ட செலவுகள் (சம்பளம், ஓய்வூதியம், வட்டி) மட்டும் ரூ.15.63 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.