41 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி; அபிஷேக் சர்மா அதிரடி; இந்தியப் பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்த வங்கதேசம்!
துபாய், செப்டம்பர் 25: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் பரபரப்பான போட்டியில், வங்கதேச அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சுதான் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 169 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா, 37 பந்துகளில் 75 ரன்களை விளாசி தனி ஒரு ஆளாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் வங்கதேச அணியின் வெற்றிக்கு வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி, சைஃப் ஹசன் மற்றும் தன்சித் ஹசன் கூட்டணி மூலம் நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. பும்ரா ஓவரில் எந்தவித ரிஸ்க்கையும் எடுக்காமல் விளையாடினர்.
ஒரு கட்டத்தில், வங்கதேச அணி 6 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது, இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாகச் சாய்த்தனர். குல்தீப் யாதவ், பர்வேஸ் (21), ஹிர்டாய் (7) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து அணியின் முதுகெலும்பை உடைத்தார். தொடர்ந்து, மற்ற வீரர்களும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் தனி ஆளாகப் போராடிய சைஃப் ஹசன், 51 பந்துகளில் 69 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க, வங்கதேச அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியாக, திலக் வர்மா வீசிய ஓவரில் வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
in
விளையாட்டு