பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டால்வின் ஜெயசீலன், ரூ. 25,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர், தனது ஒன்றரை சென்ட் நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்யக் கோரி கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தார். இந்தப் பணிக்கு கிராம நிர்வாக அதிகாரி ஸ்டால்வின் ஜெயசீலன், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து விஜயா, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். கூடுதல் எஸ்.பி. மெஸ்கலரின் எஸ்கால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜயாவிடம் கொடுத்து அனுப்பினர்.
விஜயாவிடம் இருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்டால்வின் ஜெயசீலனைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.