சாட்சிகள் இருந்தும் ஏன் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை? - சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி; காவல் துறைக்கு கடும் கண்டனம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், காவல்துறை விசாரணை திருப்திகரமாக இல்லை எனக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாட்சிகள் இருந்தும் ஏன் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை என நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பி, காவல் துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஆயுதம் ஏந்திய கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை காவல்துறை சுமார் 30 பேரை கைது செய்து, 7000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், காவல் துறை விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், ஊடகங்கள் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டதால் அடையாள அணிவகுப்பு தேவையில்லை எனக் காவல்துறை தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. குற்றத்தின் நேரடி சாட்சி ஊடகங்களா? விசாரணை குறைபாடுகளாலேயே பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த வழக்கும் அதற்கு ஒரு உதாரணம் எனக் காட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
in
தமிழகம்