ஹவாலா பணமா என போலீசாருக்கு சந்தேகம்; சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையர்கள் சிக்கினர்!
வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த செல்போன்களை விற்று ரூ. 8 லட்சத்துடன் சென்ற கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒருவரை மிரட்டிக் கொள்ளையடித்த வழக்கில், நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஆறு பேரைத் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்சத் உசேன், கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கத்தாரில் இருந்து சென்னை வந்த அவர், அங்கு வாங்கி வந்த செல்போன்களை ஈவினிங் பஜாரில் விற்றுள்ளார். பிறகு, கிடைத்த ரூ. 8 லட்சம் பணத்துடன் தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மூர் தெரு சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணப்பையைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த அர்சத் உசேன், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பறிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
4 பேர் கைது:
இந்த வழக்கில் கொள்ளையடித்ததாக மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜஸ்டின், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அகஸ்டின், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சரவணன், லோகேஷ் ஆகிய நான்கு பேரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஆறு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.