ஆடை வடிவமைப்பாளர் அளித்த வாக்குமூலம், ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை; திரையுலகில் பெரும் சலசலப்பு!
திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ள நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு, நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 26 ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ஏற்கனவே திருமணமான ரங்கராஜ், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி இரண்டு வருடங்கள் தன்னோடு வாழ்ந்ததாகவும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் தந்தை என்றும் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும் ஜாய் கிரிசில்டா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தனது புகாரின் மீதான விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், கடந்த செப். 22ஆம் தேதி அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். துணை ஆணையர் தலைமையில் அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ரங்கராஜ் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியது தொடர்பான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
தற்போது, ஜாய் கிரிசில்டா அளித்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக, அவரிடம் விசாரணை நடத்த நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.