தமிழகத்தில் கைதான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியால் அம்பலம்; உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உளவு பார்க்கப்பட்டது அம்பலம்!
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி செங்கல்பட்டில் வைத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அக்லத்தூர் முகமது (21) என்ற இளைஞரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பதும் தெரியவந்தது. கூலித் தொழிலாளி வேடத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தங்கி, அரசியல் தலைவர்கள் குறித்து உளவு பார்த்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிறையில் இருந்த அக்லத்தூர் முகமதுவை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தினர். அதில், அவர் ஐடிஐ படிப்பு முடித்தவர் என்றும், 16 வயதிலிருந்தே லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தான் சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சி மூலம் பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வந்ததும், பாகிஸ்தானில் இருந்து பணம் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அக்லத்தூர் முகமது உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்தபோது, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து, சமூக வலைதள ரகசியக் குழுக்கள் வழியாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுடன் தகவல் பரிமாறிக்கொண்டதும் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதையடுத்து, NIA அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதல் தமிழ்நாடு (தூத்துக்குடி ), பீகார் (8 இடங்கள்), ஜம்மு காஷ்மீர் (9 இடங்கள்), உத்தரப் பிரதேசம் (2 இடங்கள்), கர்நாடகா, மகாராஷ்டிரா என 6 மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்லத்தூர் முகமது மற்றும் ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் கைதான சுமார் 10 பயங்கரவாதிகளுக்கும் என்னென்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் முடிவில்தான், பயங்கரவாதிகளின் முழு சதித் திட்டங்களும், அவர்கள் உளவு பார்த்த அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்களும் முழுமையாகத் தெரியவரும் என்று NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.