வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு; பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கும் போலீஸ்!
சென்னை வடபழனியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயிலும், மூக்கிலும் ரத்தம் கசிந்த நிலையில் சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனி, மன்னார் முதல் தெருவில் வசித்து வந்த மகேந்திரன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த சில வருடங்களாகக் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த இவர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு மாதமாக வடபழனியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் வசித்து வந்தார்.
சஞ்சனா ஸ்ரீயின் பிறந்தநாள் நேற்று முன்தினம் என்பதால், ஈரோட்டிலிருந்து அவரைச் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், அவருக்குக் காய்ச்சல் இருந்தபோதிலும், பெற்றோர் அவரை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்று மீன் போன்ற உணவுகளை வாங்கித் தந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றிரவு அவருக்கு மருந்து கொடுத்துத் தூங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலைக் குழந்தையை எழுப்பியபோது எந்த அசைவும் இல்லாமல், வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்துள்ளதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார், சஞ்சனா ஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆஸ்பிரேஷன் நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாகச் சிறுமி இறந்திருக்கலாமெனத் தெரியவந்துள்ளது. எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரிய வரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.