89 ஏக்கர் நிலம் தனியாருக்கு விற்பனை; தரகர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இரவு முழுவதும் போராட்டம்! - பேச்சுவார்த்தை தோல்வி!
தேனி மாவட்டம், பூமழைகுண்டு கிராமத்தில், போலியான ஆவணங்கள் மூலம் தங்கள் கிராம நிலம் தனியாருக்கு விற்கப்பட்டதைக் கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலம் தங்களுக்கு மீட்டுத் தரப்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனக் கூறி அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே சமைத்துத் தங்கி போராடி வருகின்றனர்.
இரண்டு தலைமுறைக்கு முன்பு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், இந்த கிராமத்தின் 89 ஏக்கர் வருவாய் நிலம் கிராம மக்களுக்குப் பொதுவானதாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பொது நிலம், கடந்த 10 வருடங்களாக தரிசு நிலமாக இருந்த நிலையில், கோவையைச் சேர்ந்த ஒரு சோலார் ஏஜென்சி நிறுவனம், காற்றாலை மற்றும் சூரிய மின் ஒளி நிறுவனம் அமைக்க இந்த நிலத்தைக் கேட்டுள்ளது.
இதை அறிந்து கொண்ட ஐந்து நிலத் தரகர்கள், போலியான ஆவணங்கள் தயாரித்து, கிராம மக்களிடம் பொய் சொல்லி 89 ஏக்கர் நிலத்தை உடனுக்குடன் பத்திரப்பதிவு செய்து பட்டா பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு பத்திரப்பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது கிராம நிலத்தை மீட்பதற்காக, அதிகாரிகள் மற்றும் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என அவர்கள் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார், தேனி வட்டாட்சியர் சதீஷ்குமார், வி.ஏ.ஓ. அன்னப்பூரணி மற்றும் பெரியகுளம் துணை ஆட்சியர் ரஜத்பீடன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.
in
தமிழகம்