கோடம்பாக்கம், ஐசிஎஃப் போலீசார் அதிரடி; நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றம்!
19 குற்ற வழக்குகளில் தொடர்புடைய, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடியைக் கோடம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல், திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் ஐ.சி.எஃப். போலீசார் கைது செய்து நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றினர்.
கோடம்பாக்கம் ரவுடி கைது:
கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் 2023ஆம் ஆண்டில் பதிவான ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ரிஷிகேஷ் என்பவர், நீதிமன்றப் பிணையில் வெளியே வந்து, விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், கடந்த செப். 17 அன்று நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது. கோடம்பாக்கம் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரிஷிகேஷ் மீது ஏற்கனவே 19 குற்ற வழக்குகள் உள்ளன. போலீசார் நடத்திய தீவிர தேடுதலில், சூளைமேட்டைச் சேர்ந்த ரிஷிகேஷ் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐசிஎஃப் போலீசார் அதிரடி:
இதேபோல், 2022ஆம் ஆண்டில் ஐ.சி.எஃப். காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கடையின் பூட்டை உடைத்துத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளியே வந்த மனோஜ் (எ) கௌதம் என்பவரும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஐ.சி.எஃப். போலீசார் கொடுங்கையூரைச் சேர்ந்த மனோஜை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.