ஆஸ்கர் உரிமத்திற்கு கடும் போட்டி! யூடியூப் முன்னிலை; பேச்சுவார்த்தையில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற போட்டி பல்வேறு நிறுவனங்களுக்கிடையே போட்டி நிலவுகிறது.
உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இனிவரும் காலங்களில் யூடியூப் (YouTube) தளத்தில் ஒளிபரப்பாகலாம் என்ற தகவல் வெளியாகிப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், 1976-ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவின் பிரபல ஏபிசி தொலைக்காட்சி (ABC) நிறுவனத்திடம் உள்ளது. இந்த ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த உரிமத்தைப் பெறுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தப் போட்டியில், கூகுள் நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளமான யூடியூப், Academy of Motion Picture Arts and Sciences உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. யூடியூப்-க்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற மற்ற முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகளும், பாரம்பரியத் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளன.
NFL Sunday Ticket போன்ற பிரபல நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஏற்கனவே வழங்கி வரும் யூடியூப், ஆஸ்கர் போன்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சியைப் பெறுவது அதன் 'லைவ் ஸ்ட்ரீமிங்' சேவைகளுக்குப் பெரும் உத்வேகத்தைத் தரும் என நம்புகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2029-ஆம் ஆண்டு முதல், பாரம்பரிய தொலைக்காட்சிகளிலிருந்து விலகி, ஆன்லைன் தளங்களை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இந்த மாற்றம் ஒளிபரப்புத் துறையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.