தவெக மாநில மாநாடு: மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. வழிகாட்டு நெறிமுறைகள் & வழித்தடங்கள் அறிவிப்பு!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்குப் போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகள், பார்க்கிங் வசதிகள்குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற இடத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த மாநாடு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்காக மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் செல்ல வேண்டிய வழிகள் மற்றும் பார்க்கிங் இடங்கள் பின்வருமாறு:
தென் மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடல் வந்து சேர வேண்டும்.
கிழக்கு மாவட்டங்கள்:
ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்மாவட்டங்களிலிருந்தும் வாகனங்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சென்று, அங்கிருந்து அ.முக்குளம், மீனாட்சிபுரம் வழியாக ஆவியூர் வந்து, மாநாட்டுத் திடலை அடையலாம். இந்த வாகனங்கள் அனைத்தும் பார்க்கிங் 1-ஐப் பயன்படுத்த வேண்டும்.
வட மாவட்டங்கள்:
சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் திருச்சி மார்க்கமாக வந்து விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு வழியாக மாநாட்டுப் பகுதியை அடையலாம். இந்த வாகனங்கள் பார்க்கிங் 2 மற்றும் 3-ஐப் பயன்படுத்தலாம்.
மேற்கு மாவட்டங்கள்:
ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல் மார்க்கமாக வந்து பாண்டியராஜபுரம், நாகமலை புதுக்கோட்டை பைபாஸ், கப்பலூர் வழியாகச் சென்று மாநாட்டு இடத்தை அடையலாம். இவர்கள் பார்க்கிங் 1-ஐப் பயன்படுத்த வேண்டும்.