த.வெ.க. கொடிக்குத் தடையில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்தத் த.வெ.க.வுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழாக வெற்றி கழகம் (த.வெ.க.) கட்சி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லையெனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சி கொடி தங்கள் அமைப்பின் கொடியை ஒத்திருப்பதால், அது வணிகச் சின்னம் மற்றும் பதிப்புரிமை சட்டத்தை மீறிய செயல் எனக் கூறி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனர் பச்சையப்பன் மனு தாக்கல் செய்திருந்தார். இரு கொடிகளும் ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால், அது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், 80 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட த.வெ.க. அமைப்பு, சிறிய அமைப்பான தங்களை விழுங்கிவிடும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த மனுவை எதிர்த்துத் த.வெ.க. தரப்பு, இரு அமைப்புகளும் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை என்பதால் கொடிமீது உரிமை கோர முடியாது. எங்கள் கொடியில் மெரூன் நிறமும், யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் போன்ற தனித்துவமான அம்சங்களும் உள்ளன. அதனால் மக்கள் மத்தியில் எந்தக் குழப்பமும் ஏற்படாது. எங்கள் கொடியால் எந்த இழப்பும் ஏற்பட்டது என்பதை மனுதாரர் விளக்கவில்லையென வாதங்களை முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, "இரு கொடிகளையும் ஒப்பிடும்போது, த.வெ.க.வின் கொடி முற்றிலும் வேறுபாடானது. இதனால் மக்கள் மத்தியில் எந்தக் குழப்பமும் ஏற்படாது எனத் தெரிவித்து, பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு, கட்சியின் கொடியைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த, த.வெ.க.வுக்கு ஒரு முக்கிய அனுமதியை அளித்துள்ளது.