காவல்துறையின் பாரம்பரிய மரியாதையை ஆடம்பரம் வேண்டாம் எனக் கூறி தவிர்த்தார்; ஐபிஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக 35 ஆண்டுகளாகப் பணியாற்றிய சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், தனது பணி ஓய்வு விழாவின்போது, காவல்துறையின் பாரம்பரியமான "ரோப் புல்லிங்" (Rope Pulling) மரியாதையை தனக்கு வேண்டாம் என மறுத்துள்ளார்.
ரோப் புல்லிங் என்றால் என்ன?
ஒரு காவல் துறை அதிகாரி ஓய்வு பெறும் போது அவருக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் செய்யப்படும் ஒரு மரியாதை இது.
ஓய்வு பெறும் அதிகாரி மற்றும் அவரது மனைவியை அலங்கரிக்கப்பட்ட காரில் அமர வைத்து, டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி போன்ற உயர் அதிகாரிகள் கயிற்றால் காரை இழுத்துச் சென்று வழியனுப்புவர்.
காக்கிச் சீருடையில் அவர் வரும் கடைசி தருணத்தை மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதே இதன் நோக்கம்.
இந்த பாரம்பரியம் 18ஆம் நூற்றாண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சங்கர் ஜிவாலின் முடிவு:
ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி ஆவது என்பது கனவு, லட்சியம். ஆனால். அனைவருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு கிடைப்பதுண்டு. அத்தகைய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு "ரோப் புல்லிங்" என்ற மரியாதை வழங்கப்படுவது வழக்கம்.
அதாவது, ஓய்வு பெறும் அதிகாரி மற்றும் அவரது மனைவியை காரில் அமர வைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவருமே கயிறு மூலம் காரை இழுத்து டிஜிபி அலுவலக வாசலுக்கு கொண்டு சென்று விடுவதுதான் "ரோப் புல்லிங்" மரியாதை. இதில் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி போன்ற உயர் அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரிகள் கயிறு மூலம் காரை இழுத்து ஓய்வு பெறுகிற டிஜிபிக்கு மரியாதை செலுத்தி பெருமைப்படுத்துவர்.
குறிப்பாக, பல ஆண்டுகளாக காவல் துறையில் காக்கிச் சீருடையுடன் வந்து பணியாற்றிய காவல் அதிகாரி, கடைசியாக காக்கி சீருடையுடன் அலுவலகத்திற்கு வரும் கடைசி தருணத்தை அவரது வாழ்நாள் முழுவதும் நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் மகிழ்ச்சியானதாக மாற்றுவதே "ரோப் புல்லிங்" மரியாதையின் நோக்கமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தருணத்தை அதிகாரியின் மனைவியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர்களின் மனைவியும் காரில் அமர வைக்கப்படுகிறார். குறிப்பாக, இந்த ரோப் புல்லிங் மரியாதை என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே அதாவது 18ஆம் நூற்றாண்டில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது ஐஜி அந்தஸ்தில் இருந்த நேரத்தில், 1874ஆம் ஆண்டு ராபின்சன் என்பவர் சென்னை மாகாண காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்றார்.
பின்னர், அவர் ஓய்வு பெற்றபோது அவருக்கு முதன் முறையாக "ரோப் புல்லிங் " மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது வரை தொடர்ச்சியாக சட்டம்- ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் அனைத்து அதிகாரிகளுக்கும் "ரோப் புல்லிங்" மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த பாரம்பரிய ரோப் புல்லிங் மரியாதை தனக்கு வேண்டாம் என ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் அன்போடு கேட்டுக்கொண்டதால் அதை செய்யாமல் விட்டதாக கூறப்படுகிறது. ஆடம்பரமாக வழி அனுப்பும் விழா வேண்டாம் என ஏற்கனவே கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏடிஜிபி, ஐஜி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரிகளும் விருப்பப்பட்டால் ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்படும் என கூறப்படுகிறது