கோவைக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: மூன்றாவது நாளாக நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு! Coimbatore Receives Third Consecutive Bomb Threat
கோவைக்கு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, இரண்டு டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாரதியார் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் மறுநாள், மாலை 4.45 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மீண்டும் ஒரு மிரட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டது. இரண்டு மிரட்டல்களும் சோதனைக்குப் பிறகு புரளி எனத் தெரியவந்தது.
இதேபோன்று நேற்று காலை, விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில், அதுவும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
மூன்றாவது நாளாக மிரட்டல்
இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்புப் பிரிவு போலீசார் விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வழக்கம்போல இம்முறையும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
காவல்துறைக்கு சவால் விடும் வகையில் மூன்றாவது நாளாகத் தொடர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருப்பதால், இது தொடர்பாகக் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.