உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கக் காரணம் திராவிடக் கொள்கைகளே - அமைச்சர் கோவி. செழியன்!
அதிமுகவின் திட்டங்களால் உயர்கல்வி மேம்பட்டது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது பொய் பிரச்சாரம்!" - திருச்சியில் அமைச்சர் பேட்டி!
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கக் காரணம் திராவிட இயக்கக் கொள்கைகளே என்று தெரிவித்தார்.
கல்லூரி நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு:
"நான் ஆரம்பக் கல்வி முதல் முனைவர் பட்டம் வரை படித்தது அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தான். ஒரு சாராருக்கு மட்டுமே கல்வி என இருந்த நிலையை மாற்றி, இன்று அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைந்திருக்கிறோம். எந்தச் சமுதாயத்திற்கு கல்வி கூடாது என்று கூறினார்களோ, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் இன்று உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறான் என்றால், அதற்குத் தந்தை பெரியாரின் போராட்டமும், அம்பேத்கர் வகுத்த சட்டமும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளும் தான் காரணம்" என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், "இந்தியை ஏற்றுக்கொண்டால் பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியபோது, 'பத்தாயிரம் கோடி தந்தாலும் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்' என உறுதியாக நின்றவர் நம் முதல்வர் மு.க. ஸ்டாலின். உயர்கல்வியைக் கண்ணாகக் காக்கும் முதல்வராக அவர் செயல்பட்டு வருகிறார்" என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அதிமுகவின் திட்டங்களால் தான் உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது ஒரு பொய் பிரச்சாரம். அது தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது" என்று திட்டவட்டமாக மறுத்தார்.
"அவர்கள் ஆட்சியில் உயர்கல்வியில் இடைநிற்றல் எவ்வளவு, மாணவர்கள் சேர்க்கை எவ்வளவு, நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை தெரியும். தற்போது தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களால் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் கேரளா என்று கூறுவார்கள், ஆனால் இன்று எல்லோரும் தமிழகம் என்று கூறுகிறார்கள். தனிமனித பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தமிழகம் அடைந்துள்ளது. இது திராவிட அரசின் கொள்கைகளால் விளைந்ததே" என்றார்.