போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை.. 13.4 கிலோ குட்கா பறிமுதல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
சென்னை பெருநகரில் போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராகக் காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமைந்தகரை பகுதியில் கள்ளத்தனமாகக் குட்கா புகையிலை பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்து விற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 13.4 கிலோ எடையுள்ள குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கே-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று (03.08.2025) அமைந்தகரை, எம்.எம்.காலனி அருகே உள்ள ஒரு கடையைத் தீவிரமாகக் கண்காணித்துச் சோதனை செய்தனர். அப்போது, அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளரான சண்முகம் (37), பாரி தெரு, சூளைமேடு, சென்னை என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சுமார் 13.4 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட சண்முகம் மீது ஏற்கனவே அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒரு குட்கா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
சட்டவிரோதமாகக் குட்கா விற்பனையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட சண்முகம், நேற்று (03.08.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறையின் இந்த நடவடிக்கை அதிரடியாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.