வந்தேறியென அழைத்ததால் சர்ச்சை: யூடியூபர் பாண்டியன் மீது தெலுங்கர் முன்னேற்றக் கழகம் அதிரடி புகார்!
"வந்தேறி" என விமர்சிக்கும் கருத்துகளுக்கும், சமூகப் பெண்களை அவதூறாகப் பேசுவதற்கும் எதிராக, தெலுங்கர் முன்னேற்றக் கழகம் சார்பில், ஒரு யூடியூபர் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் அதிரடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்த கடும் விவாதங்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
"ஐந்தாம் தமிழ் சங்கம் பாண்டியன்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருவர், நாயுடு சமூகப் பெண்களைத் தவறாகவும், இழிவாகவும் பேசி ஒரு பதிவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது, சமூகத்தில் சாதியக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வருகிறது எனக் குற்றம் சாட்டி, தெலுங்கர் முன்னேற்றக் கழக நிறுவனர் புகழ் பாலாஜி நாயுடு புகார் மனுவை வழங்கியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழ் பாலாஜி நாயுடு, தமிழகம் முழுவதும் தெலுங்கு பேசும் நாங்கள் வசித்து வருகிறோம். சிறுபான்மை மொழி பேசும் எங்களுக்கு இங்குப் பாதுகாப்பு இல்லையா? இந்தக் கேள்விக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் விஜயநகரப் பேரரசுக் காலம் முதல் இங்கு வாழ்ந்து வருகிறோம். நாங்கள் இங்கு வாழ்ந்தவர்கள், 'வந்தேறி' கூட்டம் அல்ல" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கி, அவர்களைக் கௌரவிக்கும் தமிழ்நாடு அரசு, இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சமூகப் பெண்களை மொத்தமாகத் தவறாகப் பேசுவது எப்படி நியாயமாகும்? காவல்துறை கண்டிப்பாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்தப் புகார்குறித்து டிஜிபி அலுவலகம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.