சைபர் குற்றவாளிக்குச் செக்: ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மீட்பு.. சென்னை காவல்துறை புதிய சாதனை!
இணையவழி மோசடிகளால் பணத்தை இழந்த பொதுமக்களின் துயரத்தைத் துடைக்கும் வகையில், சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 234-ஐ "அதிரடியாக மீட்டு, ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளனர். சைபர் குற்றவாளிகளின் சூழ்ச்சி வலைகளை முறியடித்து, காவல்துறை காட்டிய இந்த வேகம், பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு போலீசார், 1930 அவசர அழைப்பு எண் மற்றும் நேரடிப் புகார்கள்மூலம், பல்வேறு வழக்குகளைத் துரிதமாக விசாரித்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கியும், அவர்களைக் கைது செய்தும், இழந்த பணத்தை மீட்டுத் தருவதில் சென்னை காவல்துறை முன்னிலை வகிக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் (01.07.2025 முதல் 31.07.2025 வரை) மட்டும், 191 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.1,65,30,234 மீட்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாகப் பார்த்தால், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையம் ரூ.90.67 லட்சம், வடக்கு மண்டலம் ரூ.13.43 லட்சம், மேற்கு மண்டலம் ரூ.15.71 லட்சம், தெற்கு மண்டலம் ரூ.23.70 லட்சம், மற்றும் கிழக்கு மண்டலம் ரூ.21.77 லட்சம் என பிரம்மாண்ட தொகையை மீட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஜூலை 31 வரை, மொத்தம் ரூ.18,08,61,565 மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது, காவல்துறையின் தொடர்ச்சியான வெற்றியைக் காட்டுகிறது. இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளின்போது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஏதாவது மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.