சென்னையில் துணை ஆய்வாளர் கொலை வழக்கு... தலைமறைவாக இருந்த இருவர் கைது!
சென்னை, எழும்பூரில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் (53) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இரண்டு நபர்களைப் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 18ஆம் தேதி, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே துணை ஆய்வாளர் ராஜாராமன் மீது ஒரு குழுவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பலத்த காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜாராமன், சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வழக்குக் கொலை வழக்காக மாற்றப்பட்டு, எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ் (30), கண்ணகி நகரைச் சேர்ந்த சரத்குமார் (எ) ஐயப்பா (36) மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நவோதித் (26) ஆகிய மூவரையும் போலீசார் கடந்த மாதம் 25ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (42) மற்றும் திரு.வி.க நகரைச் சேர்ந்த முருகேசன் (57) ஆகிய இருவரையும் எழும்பூர் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.