சென்னையில் உயிர் காக்கும் காவல்துறை: சாலை விபத்து உயிரிழப்புகள் 12% குறைப்பு!
சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால், நகரில் ஏற்படும் சாலை விபத்து உயிரிழப்புகள் கடந்த ஆண்டைவிட 12% அதிரடியாகக் குறைந்து, ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான காவல்துறையின் முப்படைகள் போன்ற நடவடிக்கைதான் இந்த இமாலய வெற்றிக்குக் காரணம் எனப் பொதுமக்கள் சிலாகிக்கின்றனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை 316 உயிரிழப்புகள் நிகழ்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் (03.08.2025 வரை) உயிரிழப்புகளின் எண்ணிக்கை 278 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, ஏறத்தாழ 38 உயிர்கள் காப்பாற்றப்பட்டதை உணர்த்துகிறது. இந்தக் குறைப்பு, வெறும் புள்ளிவிவரம் அல்ல, அது பல குடும்பங்களின் கண்ணீரைக் துடைத்திருக்கிறது.
இந்தச் சாதனைக்குக் காரணம், போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்தான். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாகப் பயணித்தல், மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு எதிராக, காவலரின் நேரடிச் சோதனைகள் மட்டுமின்றி, ANPR கேமராக்கள், 2D வேக ரேடார் அமைப்பு போன்ற நவீன தொழில்நுட்ப முயற்சிகளையும் காவல்துறை கையில் எடுத்துள்ளது. இது, விதிமீறல்களுக்கு எதிராக ஒரு கடுமையான வேட்டையை நடத்தி வருகிறது.
அமலாக்கப் பணிகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பள்ளி குழந்தைகள், ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கான சாலைப் பாதுகாப்புக் கல்வித் திட்டங்களையும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், சாலை தன்மைகளை மேம்படுத்துதல், அறிவிப்புப் பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகளைப் பொருத்துதல் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் காவல்துறை நிபுணர்களுடன் இணைந்து செய்து வருகிறது. இந்தக் கூட்டு முயற்சிகள் தொடர்ந்து நீடிக்கும் எனச் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை உறுதி அளித்துள்ளது.