தூத்துக்குடியில் நிகழ்ந்த பயங்கரம்... மனைவியைக் கொலை செய்த சிஆர்பிஎஃப் வீரர் சென்னையில் கைது!
தூத்துக்குடி, ஏரல்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த ஒரு சிஆர்பிஎஃப் வீரர், சென்னைக்கு தப்பி வந்து, ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சென்று 'பேட்டி' கொடுக்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளவாய்புரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரான இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, வழக்கம்போல வாக்குவாதம் நடந்த நிலையில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த உமாவை, வீட்டிலிருந்த அரிவாளால் தமிழ்ச்செல்வன் சரமாரியாக வெட்டி வீழ்த்தியிருக்கிறார். உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதால், உமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பின்னர், நள்ளிரவில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் எழுப்பி, உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, அவர்களிடம் ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு தமிழ்ச்செல்வன் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த ஏரல் போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தமிழ்ச்செல்வன் இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது அம்பலமானது.
தலைமறைவாக இருந்த தமிழ்ச்செல்வனை தூத்துக்குடி போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் சென்னையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்ச்செல்வன், தான் மனைவியைக் கொலை செய்ததாகவும், அதற்காகப் பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் கூறி தொலைக்காட்சி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். உடனடியாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த தேனாம்பேட்டை போலீசார், தமிழ்ச்செல்வனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரிடம் தமிழ்ச்செல்வன் ஒப்படைக்கப்பட்டார்.