"தெரு நாய்கள் விவகாரம்: அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
சட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லையென உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், நாய்களைக் காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுமீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக உள்ள தெரு நாய்கள் பிரச்னைகுறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளது. தெரு நாய்களைக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முக்கியக் காரணம் எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். "சட்டங்கள் இருந்தும் அவை ஏன் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை? இந்த நிலைக்கு அதிகாரிகளின் அலட்சியமே முக்கியக் காரணம்" என நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
"தெரு நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சவால்களையும் அரசு உணர்ந்துள்ளது. ஆனால், அவற்றைக் கையாள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்ப்பதில் அரசுத் துறை உரிய கவனம் செலுத்துவதில்லை" என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், தெரு நாய்களைக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்துப் பல்வேறு தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தத் தீர்ப்பு, தெரு நாய்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைப்படுத்துதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.