ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தைப் புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். முதல்வரின் இந்த அதிரடி முடிவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் பேசி வருவது போன்ற காரணங்களால் இந்த அரசியல் 'போர்க்களம்' தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது.
இந்த நிலையில், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து, அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த விருந்தில் பங்கேற்க வேண்டாமென முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பல்வேறு அரசியல் 'இஸ்யூ'க்களில் ஆளுநரின் செயல்பாடுகள்குறித்து அதிருப்தி தெரிவித்த தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் கடந்த காலங்களில் இதேபோல் தேநீர் விருந்தைப் புறக்கணித்திருந்தன. முதல்வரின் இந்த முடிவு, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு 'கண்டிப்பு' நடவடிக்கையாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம், ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தலாமென அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.