கோவை தனியார் பேருந்து 'மோசடி': பழைய வாகனத்தைப் பி.எஸ் 4 என மாற்றிய உரிமையாளர்மீது புகார்!
கோவை மாநகரில் இயங்கி வரும் தனியார் பேருந்து ஒன்றில், பழைய பேருந்தின் சேஸ் எண்ணை, புதிய பி.எஸ் 4 (BS4) வாகனத்தின் எண்ணாக மாற்றிப் பெரும் மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதால், பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரில் உக்கடம் முதல் பாப்பம்பட்டி பிரிவுவரை 77 என் என்ற வழித்தடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் நகரப் பேருந்து இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நீண்ட நாட்களாகப் பழைய சேஸ் எண்ணுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த எண்ணை விதிமுறைக்கு முரணாக, புதிய பி.எஸ் 4 வாகனத்தின் எண்ணாக மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த பிற தனியார் பேருந்து உரிமையாளர்களும், தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, இந்த வண்டிக்கு எப்படி சான்றிதழ் வழங்கப்பட்டது? வாகனத் தணிக்கையின்போது இது எப்படி சிக்காமல் போனது? என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்தப் பேருந்தின் உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்று விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கும் மற்ற பேருந்துகளையும் தீவிரமாகச் சோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, பீளமேடு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் அவர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர். இந்தச் சம்பவம், மக்கள் தனியார் பேருந்துகள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.