பிரம்மோஸ் ஏவுகணை, கடற்படைப் பயிற்சி: இந்தியா-பிலிப்பைன்ஸ் உறவில் புதிய அத்தியாயம்!
பிராந்திய மற்றும் உலகப் பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவக் கூட்டுறவு கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்குப் புதிய சவால் விடுக்கும் வகையில், இரு நாடுகளும் இணைந்து ஒரு "புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சிலாகிக்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரொமுவால்டஸ் மார்கோஸ் ஜூனியர், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான உறவு ஒரு வியூகப் பங்காண்மை நிலைக்கு உயர்த்தப்படுவதாக இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். இது வெறும் ஒரு தூதரக உறவு மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையின் ஆழமான சின்னம் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இரு தலைவர்களின் சந்திப்பில், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை முதன்மை இடத்தைப் பிடித்தன. இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவது, கடற்படைப் பயிற்சிகளை அதிகரிப்பது, கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. மேலும், தென் சீனக் கடலில் கடற்பயணச் சுதந்திரத்தை உறுதிசெய்யவும், சர்வதேச சட்டங்களின்படி விதிகளை நிலைநாட்டவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
பாதுகாப்புத் துறையைத் தவிர, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை உருவாக்கவுள்ளன. இன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் சந்திக்கும் அதிபர் மார்கோஸ், பின்னர் பெங்களூருவுக்குச் சென்று தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். இந்தியாவுடனான தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தச் சந்திப்பு, எதிர்கால உறவுகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.