கோவையில், ரயில் பயணத்தின்போது தவறவிட்ட சுமார் 50 பவுன் தங்க நகைகளை, ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், ரயில் பயணத்தின்போது ரயிலில் தவறவிட்ட சுமார் 50 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் செல்போன் அடங்கிய பையை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.
கோயம்புத்தூர், முத்தையா நகரைச் சேர்ந்த ரவிக்குமார் (53), தனது குடும்பத்தினருடன் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம் செய்தார். கோயம்புத்தூர் வந்ததும், ரயிலில் இருந்து அவசரமாக இறங்கியபோது, தங்க நகைகள் இருந்த ஒரு பையைக் கவனக்குறைவாக ரயில் பெட்டியிலேயே விட்டுவிட்டார்.
ரயில் பெட்டிகளை ஆய்வு செய்துகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் மணிகண்டன், அந்தப் பையைக் கண்டெடுத்து, அதில் விலை உயர்ந்த நகைகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனடியாக, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, பையை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார்.
இதற்கிடையில், பையைத் தொலைத்ததை அறிந்த ரவிக்குமார், கோவை ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்தார். அப்போது, அந்தப் பையில் இருந்த செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது, ரயில்வே போலீசார் தொலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசினர். ரவிக்குமார் அளித்த அடையாளங்களை வைத்து, அது அவரது பையே என உறுதி செய்த போலீசார், நகைகள், பணம் மற்றும் செல்போன் அடங்கிய பையை அவரிடம் ஒப்படைத்தனர்.