டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் போர் 2 வாரங்களில் தீர்வு என டிரம்ப் 'அதிரடி' அறிவிப்பு!
வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு! பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைவர்களும் பங்கேற்பு!
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினார். இந்த முக்கியச் சந்திப்பில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "போரில் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர். உக்ரைன் மக்களை நாங்கள் நேசிக்கிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்படியொரு நிலை ஏற்பட்டதில்லை, இது போன்று இனி ஒரு போர் நடக்கக் கூடாது" என்றார்.
மேலும், "இன்னும் சற்று நேரத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச உள்ளேன். அவர் ஒத்துழைப்பு வழங்குவாரென நம்புகிறேன். பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் இரண்டு வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்" என்றும் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
அதன் பின்னர் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவி மிகவும் தேவை. இன்று கூட ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பாதுகாப்பை உறுதி செய்யாமல் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது, யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும்" என்றார்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் சந்திப்பு, உக்ரைன் போருக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருமா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
in
உலகம்