ஜாம்பஜாரில் 1.142 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்! விற்பனையாளர் கைது!
ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அருண் அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த அமுல்குமார் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் மேற்பார்வையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் மற்றும் ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், ராயப்பேட்டை பெரோஸ் தெருவில் நடத்திய கண்காணிப்பின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அங்கு சட்ட விரோதமாகக் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அமுல்குமார் யாதவை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரிடமிருந்து 1.142 கிலோ எடையுள்ள 228 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட அமுல்குமார் யாதவ் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.