கோவை காவல் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்நபர் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்!
கோவை மாநகர கடை வீதி காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் "பெரும் பரபரப்பை" ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர், காவலர்களின் கவனத்தைக் கடந்து முதல் மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி "அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, பேரூர் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) என்பவர், கடை வீதி காவல் நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர், அவருடைய மனநிலை சரியில்லாததை அறிந்து, அவரை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், காவலருக்குத் தெரியாமல் மீண்டும் காவல் நிலையத்திற்குள் நுழைந்த ராஜன், முதல் மாடியில் உள்ள உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று, நாற்காலியின் உதவியுடன் கதவை உள் தாழிட்டுத் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை, உதவி ஆய்வாளர் அலுவலகத்தைத் திறக்க வந்த காவலர் செந்தில்குமார், கதவு உள் பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது ராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம்குறித்து, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், "இது லாக்கப் மரணம் கிடையாது; தற்கொலைதான். கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம்குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்புக்கான காரணம்குறித்துத் தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் கோவை நகரில் "பெரும் சோகத்தையும், பதற்றத்தையும்" ஏற்படுத்தியுள்ளது.