Whatsapp மோசடியில் சிக்கிய பிரபல நடிகர் – சைபர் கிரைமில் புகார்!
செலான் மோசடியில் சிக்கி தனது வாட்ஸ் அப்பக்கம் முடக்கப்பட்டதாகச் சைபர் கிரைமில் பிரபல நடிகர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கோலங்கள், செல்லமே உள்ளிட்ட பிரபல தொடர்களிலும், துப்பறிவாளன், ஆம்பள உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமடைந்தவர் அபிஷேக். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான வெப்சீரிஸ் பிரபலமாகி உள்ளது.
இவர் செலான் மோசடியில் சிக்கி தனது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகச் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தனது வாகன பதிவெண்ணுடன் இ செலான் போக்குவரத்து காவல்துறை அனுப்பியது போலத் தனது whatsapp எண்ணிற்கு வந்ததாகவும், அதைப் பார்த்துப் பயந்து தான் அந்தச் செலானில் இருந்த லிங்கை கிளிக் செய்ததாகவும் அதன் பின்னர் உடனே தனது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு டிபி மாற்றப்பட்டதாகவும் இதனால் தனது வாட்ஸ் அப்பை ஹேக் செய்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூறி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் செல்போன் எண் மற்றும் வாகன பதிவு எண்ணைச் சைபர் கிரைம் கும்பல் எப்படியோ திருடி இது போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் உசாராக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். இது போன்று மெசேஜ் வந்தால் யாரும் அந்த லிங்கை தொட வேண்டாம் எனவும் நடிகர் அபிஷேக் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
பொதுவாகச் சைபர் கிரைம் கும்பல் வாட்ஸ் அப்பை ஹேக் செய்து அதன் மூலமாகத் தெரிந்த நபர்களுக்கு அவசரமாகப் பணம் வேண்டும் எனத் தெரிவித்து பணம் பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.