சேலத்தில் அதிர்ச்சி... ஹோட்டலில் இளைஞர் படுகொலை: 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் வெறிச்செயல்!
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர், சேலம் காவல்நிலையம் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், இந்த "அதிர்ச்சி சம்பவம்" இன்று காலை அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர் தூத்துக்குடி பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம்மூலம் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், சேலம் மாவட்டம் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்துபோட நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி முதல் மதன்குமார் காலை மாலையென இரு வேளைகளும் கையெழுத்துப் போட வந்து சென்று உள்ளார்.
தினசரி சேலம் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்துப் போடுவது வழக்கம். இன்றும் அதே போலக் காவல் நிலையத்திற்கு வந்த அவர், கையெழுத்துப் போட்டுவிட்டு அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட அமர்ந்துள்ளார்.
அப்போது, திடீரென ஹோட்டலுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளைஞரைச் சுற்றி வளைத்தது. அங்குக் கூடியிருந்தவர்கள் முன்னிலையில், அந்த இளைஞரை அந்தக் கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் துடிக்கத் துடிக்க வெட்டியுள்ளது.
ஹோட்டல் முழுவதும் "ரத்தம் தெறித்து" சிதறியது. அங்கிருந்த அனைவரும் பயத்தில் அலறியடித்து சிதறி ஓடினர். தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே "துடிதுடித்து" உயிரிழந்தார்.
கொலை நடந்து முடிந்ததும், அந்த மர்மக்கும்பல் எந்தவித பதட்டமுமின்றி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் காவல்துறையினர், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த "துணிகரக் கொலை" குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் முன்விரோதமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பொது இடத்தில், காவல் நிலையம் அருகே நடந்த இந்தச் சம்பவம், சேலம் நகர மக்களைப் பெரும் அச்சத்தில்ஆழ்த்தியுள்ளது.