அருணாச்சலாமகும் அண்ணாமலையார் கோயில்.. ஆதாரங்கள் சொல்லும் உண்மை!
நினைத்தாலே முக்தி தரும் தலமாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ள திருவண்ணாமலை திருத்தலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு அனைத்து மொழிப்பேசும் மக்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில மாதங்களாகத் தெலுங்கு மொழிப்பேசும் மக்களின் வருகை அதிகரித்துள்ளதால், திருவண்ணாமலை நாளுக்கு நாள் தெலுங்கு மக்களுக்கான நகரமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்...
திருவண்ணாமலையின் பழமையான வரலாறு
திருவண்ணாமலை தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியத்தில் கூட இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொண்டைமான் இளந்திரையன் இந்த நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறியலாம்.
பல்வேறு வம்சங்களின் ஆட்சி
பல்லவர் காலம் (கி.பி. 4-9 நூற்றாண்டு):
பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
சோழர் காலம் (கி.பி. 850-1280):
சோழர்கள் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியை ஆண்டனர். ஆதித்ய சோழன் முதல் பராந்தக சோழன் காலம்வரை (கி.பி. 871-955) இந்த நகரம் முக்கியத்துவம் பெற்றது.
அண்ணாமலையார் கோயிலின் சிறப்புகள்
திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி (நெருப்பு) தலமாக விளங்குகிறது.
மற்ற நான்கு தலங்கள்:
காற்று - கலஹஸ்தி
நீர் - திருவானைக்கா
மண் - திருவாரூர்
ஆகாயம் - சிதம்பரம்
கோயிலின் கட்டுமான சிறப்புகள்
"நினைத்தாலே முக்தி தரும் தலம்" என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிவன் கோயில்களில் ஒன்றாகும்.
முக்கிய சிறப்புகள்:
66 மீட்டர் (217 அடி) உயரம் கொண்ட ராஜகோபுரம் பதினொரு நிலைகளுடன் தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த கோபுரமாகத் திகழ்கிறது.
சிறந்த கட்டிடக்கலைக்கு உதாரணமாக ஆயிரம் தூண் மண்டபம், 9 கோபுரங்கள், 7 பிராகரங்க்களுடன் பிரமாண்டமாக உள்ளது. அண்ணாமலையார் கோயில். இங்கு அமைந்துள்ள மலை லிங்க வடிவில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது.
அண்ணாமலையாரின் ஆன்மீக மகத்துவம்
திருவண்ணாமலை கோவிலில் அமைந்துள்ள அண்ணாமலையார் சிவபெருமானின் உருவமாகவே கருதப்படுகிறார். இங்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாது உலகின் பல இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இத்திருத்தலத்தின் சிறப்பாகக் கூறப்படும் இங்கு அமைந்துள்ள லிங்க வடிவ மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானி பீர்பால் சகானி தெரிவித்துள்ளது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கிரிவலத்தின் சிறப்பு
14 கி.மீ நீளமுள்ள கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை வலம் வருகின்றனர். கிரிவலத்தின்போது சிவனின் நாமத்தை உச்சரித்ததால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும், அந்நாளில் கிரிவலம் செல்வதால் பாவவிமோசனம் நிச்சயம் கிடைக்கும் என்றும், கிரிவலப்பாதையில் நடந்து செல்லும்போது சித்தர்கள் தென்படுவார்கள் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
ரமண மகரிஷியின் ஆசிரமம்
1922 முதல் 1950 வரை ரமண மகரிஷி இங்கு வாழ்ந்தார். அவரது "யார் நான்?" (ஆத்ம விசாரம்) என்ற தத்துவம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இன்றும் அவரது ஆசிரமம் உலகெங்கும் உள்ள அவரது பக்தர்கள் பலரையும் ஈர்க்கிறது. திருவண்ணாமலைக்கு வருபவர்கள் ரமண மகரிஷின் ஆசிரமத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். இது தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு மேற்கே, அருணாசல மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
கார்த்திகை தீபத்தின் மகத்துவம்
ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப விழா, தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து காண்போருக்குக்கும் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின்போது, அதிகாலை நேரத்தில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்று கூறுவார்கள். அன்றைய தினம், 2668 அடி உயரத்தில், மாலை நேரத்தில் மலை உச்சியில் செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் ஏற்றப்படும் தீபம், மகாதீபம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.
சுற்றுலாத் துறையின் வளர்ச்சி
2024 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, திருவண்ணாமலைக்கு 86 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சித்ரா பௌர்ணமியில் மட்டும் 20 லட்சம் பக்தர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலைக்கு வருகைதரும் பக்தரகளை கணக்கெடுக்க முடியாத சூழல் இன்றளவும் உள்ளது. அந்த அளவிற்கு திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் போதும் அதிகரித்து வருகிறது.
தெலுங்கு மக்களின் வருகை அதிகரிப்பு
வரலாற்று தொடர்புகள்
திருவண்ணாமலை பகுதியில் முன்னதாகவே பெரியளவில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் உள்ளனர். 1980களிலிருந்தே தெலுங்கு மக்கள் இங்கு வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கொரோனா பெருந்தொற்றான கோவிட்-19க்குப் பின்னர் திருவண்ணாமலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா துறையின் பெரும்பங்கு திருவண்ணாமலையில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆன்மீக சுற்றுலாவின் வளர்ச்சியில், கோவிட்-19க்குப் பிறகு ஆன்மீக சுற்றுலா 35% அதிகரித்துள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தெலுங்கு இந்து ஆன்மிக சொற்பொழிவாளர்கள் திருவண்ணாமலையை தெலுங்கு மக்களின் தெய்வம் எனக் கூறியுள்ளனர். தெலுங்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுபவர்களினால், முழுக்க இத்திருத்தலம் தெலுங்கு பேசும் மக்களுக்கு உரியாதகவே கூறப்படுகிறது.
கடந்த வருடம் திருப்பதி லட்டு கலப்பட பிரச்சினை ஏற்பட்டபோது, திருப்பதிக்கு மாற்றாக வேறு ஆன்மீக இடங்களைத் தேடினர், அச்சமயம் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பலரும் திருவண்ணாமலை குறித்து பேசியதால் தெலுங்கு மக்கள் திருவண்ணாமலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
டிஜிட்டல் யுகத்தின் மாற்றங்கள்:
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் கோயிலின் அழகிய படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இளம் தலைமுறையினர் ("ஜென் Z" மற்றும் மில்லினியல்ஸ்") ஆன்மீக சுற்றுலாவில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். "ஸ்ரைன்கேஷன்ஸ்" (Shrinecations) என்ற புதிய போக்கு பலபேரிடையே வளர்ந்துள்ளது. திருவண்ணாமலைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள்
அரசின் முயற்சிகள்:
சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால், சாலை மற்றும் ரயில் இணைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில், திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய சிறப்பு நாட்களின்போது, 2500 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. அதேப்போல், மத்திய அரசும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
உள்ளூர் மக்களின் கவலைகள்
போக்குவரத்து நெரிசல்
உள்ளூர் மக்கள் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் காரணமாக அதிகமான போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றனர். மருத்துவமனை செல்வது, மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்ற அன்றாட வேலைகள் கூடப் பாதிக்கப்பட்டுள்ளது.
கலாச்சார பாதிப்புகள்
கோயிலின் வெளியே மற்றும் உள்ளே சில இடங்களில் தெலுங்கு மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மற்ற மொழிப்பேசும் பக்தர்களும், தமிழ் மொழி பேசும் பக்தர்களும் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். உள்ளூர் வணிகர்கள், தெலுங்கு மொழி கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிகரிக்கும் அண்ணாமலையார் பக்தர்களால், வியாபாரம் ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், சில பகுதிகளில் நிலங்கள், வீட்டு வாடகை, கடை வாடகைகளும் உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாகத் திருவண்ணாமலை என்ற பெயர் தற்போது மாற்றப்பட்டு அருணாச்சலம் என்று அழைக்கபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் பதிவேடுகளில் திருவண்ணாமலை என்று இடம்பெற்றுள்ள பெயரை நீக்கி, அரசு பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர் பலகை வைத்திருந்தனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையான நிலையில் அப்பெயர் உடனடியாக நீக்கபப்ட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலக் கண்ணோட்டம்
நிலையான சுற்றுலா வளர்ச்சயை கருத்தில் கொண்டு தமிழக அரசும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் குறிப்பாக, ரூ.8 கோடி செலவில் 2000 பக்தர்கள் தங்கும் அளவில் காத்திருப்பு மண்டபம் கட்டப்படுகிறது புதிய வரிசை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நிர்வாக அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
கலாச்சார பாதுகாப்பு
திருவண்ணாமலையில், நாளுக்கு நாள் சுற்றுலா வளர்ச்சி அதிகரித்துக்காணப்படும் அதே சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. திருவண்ணாமலையின் அசல் தமிழ் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றே தமிழ் ஆர்வலர்கள் மட்டுமில்லாது தமிழக மக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து மொழிகளில் உள்ள பக்தர்களையும் வரவேற்கும் அதே நேரத்தில் உள்ளூர் மரபுகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் திருவண்ணாமலைக்கு வருகைதரும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
முடிவுரை
திருவண்ணாமலை ஒரு பழமையான ஆன்மீக நகரம் ஆகும், அது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் புதிய பரிமாணங்களைப் பெற்று வருகிறது. தெலுங்கு மக்களின் வருகை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இது உள்ளூர் கலாச்சாரத்தையும் பாதிக்கிறது. நிலையான சுற்றுலா வளர்ச்சியுடன் கலாச்சார பாதுகாப்பைச் சமநிலைப்படுத்துவது தற்போதைய சவாலாக உள்ளது. திருவண்ணாமலையின் ஆன்மீக மகத்துவம் அனைத்து மொழிகளைச் சேர்ந்த பக்தர்களையும் அரவணைக்கும் அதே நேரத்தில், அதன் தமிழ் வேர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.