Surya Birthday: திரை பயணத்தின் தொடக்கம் முதல் தேசிய விருது வரை... சூர்யாவின் வாழ்க்கை பயணம் ஒரு பார்வை!
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சரவணன் சிவகுமார் என்ற இயற்பெயரில் பிறந்த சூர்யாவின் வாழ்க்கைப் பயணம் ஒரு சாதாரண கார்மெண்ட்ஸ் தொழிலாளியிலிருந்து தமிழ் சினிமாவில் சாதித்த நடிகர்களில் ஒருவராக மாறிய அற்புதமான கதையாகும். இந்த பயணம் வெற்றிகள், தோல்விகள், போராட்டங்கள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒன்றாகும்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் திரையுலக நுழைவு
சூர்யா 1975 ஜூலை 23 அன்று சென்னையில் நடிகர் சிவகுமார் மற்றும் லட்சுமி தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்தார். அவரது தம்பி கார்த்தியும் ஒரு நடிகர், தங்கை பிருந்தா ஒரு பின்னணி பாடகி. நடிகர் சிவக்குமாரின் மகனாக பிறந்திருந்தாலும், சூர்யாவின் வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமானதாக தான் இருந்தது.
சூர்யா ஆரம்பத்தில் நடிக்க விரும்பவில்லை. பி.காம் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு கார்மெண்ட் எக்ஸ்போர்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். முதல் 15 நாட்களில் அவர் 750 ரூபாய் சம்பளம் பெற்றார், பின்னர் அது மாதம் 1,200 ரூபாயாக உயர்ந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அவர் இந்தத் தொழிலில் இருந்து, இறுதியில் மாதம் 8,000 ரூபாய் வரை சம்பளம் பெற்றார்.
திரையுலக நுழைவுக்கான காரணம்
சூர்யா திரையுலகில் நுழைந்ததன் பின்னனியில் ஒரு சோகக் கதை உள்ளது. அவரது தாய் லட்சுமி அவரிடம், "தான் 25,000 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும், அது உன் அப்பாவுக்குத் தெரியாது" எனக் கூறியுள்ளானர். இது சூர்யாவுக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. குடும்பத்தின் வங்கி இருப்பு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியதே இல்லை என்றும், அவரது தந்தை வேலை வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர் என்றும் அப்போது தான் சூர்யா தெரிந்து கொண்டுள்ளார்.
1995 இல் இயக்குநர் வசந்த் அவருக்கு 'ஆசை' படத்தில் ஒரு வாய்ப்பு அளித்தார், ஆனால் சூர்யா அதை நிராகரித்தார். அதன்பின் குடும்பத்தின் நிதி நிலை மற்றும் தாயின் கடனைத் தீர்க்க வேண்டிய அவசியத்தின் காரணமாக, 1997 இல் மணிரத்னம் தயாரித்த 'நெருக்கு நேர்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆரம்பகால படங்கள் மற்றும் போராட்டங்கள்
'நெருக்கு நேர்' (1997) சூர்யாவின் முதல் படமாகும், இதில் விஜயும் நடித்திருந்தார். இயக்குநர் மணிரத்னம் தான் சரவணன் எனும் பெயரை மாற்றி அவருக்கு 'சூர்யா' என்ற பெயரைக் கொடுத்தார், படம் வெற்றி பெற்றாலும், சூர்யாவுக்கு அதிக கவனம் கிடைக்கவில்லை. மாறாக நடனமாட தெரியவில்லை, நடிப்பு வரவில்லை, உருவ கேலிகளையே சந்தித்தார்.
அடுத்தடுத்து சூர்யா 'காதலே நிம்மதி' (1998), 'சந்திப்போமா' (1998), 'பெரியண்ணா' (1999) போன்ற படங்களில் நடித்தார், ஆனால் இவை பெரும்பாலும் தோல்வி படங்களாகவே முடிந்தன. இந்தக் காலகட்டத்தில் அவர் நடிப்பிலும் போராடினார். "நான் தடுமாறிக் கொண்டிருந்தேன், வசனங்களை மறந்துவிடுவேன், எப்படி நடிப்பது என்றே தெரியாது" என்று பின்னர் மேடைகளில் அவர் ஒப்புக்கொண்டார்.
வாழ்க்கையில் திருப்புமுனை
நந்தா' - முதல் பெரிய வெற்றி
2001ல் இயக்குநர் பாலாவின் 'நந்தா' படம் சூர்யாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு முன்னாள் கைதியின் வேடத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்காக அவர் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
பொற்காலத்தின் ஆரம்பம் (2003-2013)
சூர்யாவின் வாழ்க்கையில் 2003 முதல் 2013 வரையிலான காலகட்டம் அவரது பொற்காலம் என்றே சொல்லலாம், இந்த 10 வருட காலகட்டத்தில் அவர் 17 படங்களில் நடித்தார், அவற்றில் பெரும்பாலானவை வெற்றி பெற்றன.
காக்க காக்க (2003): கௌதம் மேனனின் இந்தப் படம் சூர்யாவிற்கு வணிக ரீதியாக பெரிய வெற்றிப்பெற்ற முதல் படமாக அமைந்தது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் வேடத்தில் அவரது நடிப்பு அவரை ஒரு நம்பகமான நட்சத்திரமாக மாற்றியது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது.
பிதாமகன் (2003): மீண்டும் இயக்குநர் பாலாவுட கைகோர்த்த சூர்யா,இந்தப் படத்தில் விக்ரமுடனும் இணைந்து நடித்தார். ஒரு மோசடியாளனின் வேடத்தில் அவரது நடிப்பிற்காக அவர் சிறந்த துணை நடிகருக்கன ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார்.
பேரழகன் (2004): உயரத்தை வைத்து உருவ கேலி செய்யப்பட்ட சூர்யா அதே போன்றதொரு வேடம் மற்றும்மொரு வேடம் என இரட்டை வேடத்தில் நடித்து முதல் முறையாக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார்.
கஜினி (2005): ஏ.ஆர். முருகதாஸின் இந்த உளவியல் த்ரில்லர் படத்தில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பணக்காரனின் வேடத்தில் நடித்தார். இந்தப் படம் அந்த வருடத்தின் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. பின்னர் இது ஹிந்தியில் ஆமிர் கானை வைத்தும் ரீமேக் செய்யப்பட்டது.
வாரணம் ஆயிரம் (2008): இரண்டாவது முறையாக கௌதம் மேனனுடன் இணைந்த சூர்யா இம்முறை கௌதமின் அரை சுயசரிதை கதையை கொண்ட படத்தில் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்தார். 16 வயதுப் சிறுவனிலிருந்து 65 வயது முதியவர் வரை பல வயதுகளில் நடித்து அசத்தினார். இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக சூர்யா ஜிம்முக்குள் நுழைந்து பல இளைஞர்களை தன்னுடன் அழைத்து சென்றார்.
அயன் (2009): கே.வி. ஆனந்தின் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் சூர்யாவின் முக்கிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. இந்தப் படம் அவரது தென்னிந்திய வசூல் எல்லைகளை விரிவுபடுத்தியது.
சிங்கம் தொடர் (2010, 2013, 2017): இயக்குநர் ஹரியின் இந்த சிங்கம் தொடர், சூர்யாவை ஒரு அதிரடி நட்சத்திரமாக நிலைநிறுத்தியது. முதல் இரண்டு படங்கள் பெரிய வெற்றி பெற்றன, 'சிங்கம் 2' 100 ரூபாய் கோடியைத் தாண்டி வசூல் செய்தது.
வீழ்ச்சிக் காலம் மற்றும் போராட்டங்கள்
2014 க்குப் பிறகான தோல்விகள்
2013 இல் 'சிங்கம் 2' வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து வந்த படங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்தன அல்லது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் கடும் விமர்சனத்திற்குள்ளாகின.
அஞ்சான் (2014): இயக்குநர் லிங்குசாமியின் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது ஆனால் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இது சூர்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
மாஸ் என்கிற மசிலாமணி (2015): வெங்கட் பிரபுவின் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தானா சேர்ந்த கூட்டம் (2018): விக்னேஷ் சிவனின் இந்தப் படமும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை.
காப்பான் (2019): கே.வி. ஆனந்தின் கடைசி படமான இதுவும் சராசரியான வெற்றியே பெற்றது.
வீழ்ச்சியின் காரணங்கள்
சூர்யாவின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன:
தவறான ஸ்கிரிப்ட் தேர்வு: பல படங்களில் கதை மற்றும் திரைக்கதை தரம் குறைந்திருந்தது.
இயக்குநர்களுடனான கருத்து வேறுபாடுகள்: வெற்றிப்படங்களை அளித்த பாலா, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுடனான சிக்கல்கள் அவரை பாதித்தன.
மாறிய சினிமா ட்ரெண்ட்: புதிய தலைமுறை நடிகர்களின் எழுச்சி மற்றும் மாறிய ரசிகர்களின் விருப்பங்கள்.
அதிக எதிர்பார்புகள்: கடந்தகால வெற்றிகள் காரணமாக ஒவ்வொரு படத்திலும் அதிக எதிர்பார்பு.
மீண்டெழும் முயற்சிகள்
OTT யுகத்தில் வெற்றி
சூரரைப் போற்று (2020): சுதா கொங்கராவின் இந்தப் படம் OTT யுகத்தில் சூர்யாவின் மீளுதயமாக அமைந்தது. விமானப் போக்குவரத்துத் தொழிலில் கீழ் மட்டத்திலிருந்து உயர்ந்த மாறன் என்ற கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்காக அவர் தேசிய விருதையையும் வென்றார்.
ஜெய் பீம் (2021): டி.ஜே. ஞணாவேல் உண்மை சம்பவத்தை தழுவி எடுத்த இந்த சமூக நீதி படத்தில் ஒரு வழக்கறிஞரின் வேடத்தில் நடித்தார். இந்தப் படம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
எதிர்மறை விமர்சனம்
கங்குவா (2024): சிறுத்தை சிவாவின் இந்த படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது ஆனால் 150 கோடி ரூபாயை கூட தாண்ட முடியாமல் பெரிய தோல்வியாகவே அமைந்தது. ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் இந்த திரைப்படத்தை OTT-யில் கொண்டாடினர். இது சூர்யாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பொதுவாக எதிர்மறை விமர்சனங்களையும் கங்குவார் திரைப்படம் பெற்றிருந்தது.
ரெட்ரோ (2025): கார்த்திக் சுப்பராஜின் இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று 65 கோடி பட்ஜெட்டை மீட்க முடியாமல் தோல்வியடைந்தது.
தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
கருப்பு: ஆர்.ஜே. பாலாஜியின் இந்த ஆன்மீகப் படத்தின் டீசர் சூர்யாவின் 50வது பிறந்தநாளான இன்று வெளியாக உள்ளது.
சூர்யா 46: வெங்கி அட்லூரியின் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது.
நடிகராக சூர்யா
சூர்யா தனது 28 வருட திரையுலக வாழ்க்கையில் பல வேடங்களில் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி முதல் பிணச் சுத்திகரிப்பாளர் வரை, கல்லூரி மாணவன் முதல் வயதான தந்தை வரை, பலவிதமான கதாபாத்திரங்களில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அவரது நடிப்பு திறமை எப்போதும் பாராட்டப்பட்டது, ஆனால் கதை தேர்வுகளே அவரை கேலிக்குள்ளாக்கியது.
சமூக பணி
சூர்யா நடிப்பைத் தவிர, 2006ல் அகரம் அறக்கட்டளையைத் தொடங்கி கல்வி நிதி உதவி மூலம் சமூக சேவை செய்து வருகிறார். இதுவரை 7,000 முதல் 8,000 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியுள்ளார். "நான் 10 மற்றும் 12ம் வகுப்பில் போர்டு தேர்வுகள் தவிர எல்லா தேர்வுகளிலும் தோல்வியடைந்தவன். ஆனால் என்னால் சாதிக்க முடிந்தது" என்று அவர் மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
முடிவுரை
சூர்யாவின் வாழ்க்கைக் கதை ஒரு சாதாரண மனிதனிலிருந்து சாதித்த நட்சத்திரமாக மாறி, தோல்விகளை சந்தித்து, மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு போராளியின் கதையாகும். ஒரு கார்மெண்ட் தொழிலாளியிலிருந்து தேசிய விருது வென்ற நடிகர் ஆன பயணம் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது. அவரது வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், அவரது உழைப்பு மற்றும் அர்பணிப்பு எப்போதும் பாராட்டப்படுவதாகவே உள்ளது.
50 வயதை எட்டும் இந்த நேரத்தில், சூர்யா இன்னும் புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளார். அவரது வரவிருக்கும் படங்கள் மூலம் அவர் மீண்டும் ஒரு முறை தனது வெற்றிப் பாதையில் திரும்ப முடியுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று நிச்சயம் - சூர்யா என்ற நடிகர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.
in
சினிமா