அஜித்குமார் மரணத்திற்கு தவெக சார்பில் நாளைக் கண்டன ஆர்ப்பாட்டம்.. கட்டுப்பாடுகள் விதித்த சென்னை காவல்துறை..!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் நாளைக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் சென்னை காவல்துறை சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் நகை ஒன்று காணாமல் போனதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பவத்தில் உடனடியாகக் காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் உள்ளதாகக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டது.
போராட்டத்திற்கு அனுமதி கேட்டுச் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு முறைப்படி கொடுக்கப்பட்ட நிலையில், மனுவைப் பரிசீலித்த போலீசார் எழும்பூரில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து வேறு தேதியில் போராட்டம் நடத்த வலியுறுத்தினர். இந்தநிலையில், தங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் தவெக ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நிலையில், சென்னை காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் உள்பட ரசிகர்களும் இன்றே சென்னை வந்தடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றம்மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு தவெக அனுமதியை வாங்கி உள்ளது. இதையொட்டி 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை காவல்துறை தவெகவுக்கு 16 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பைக் பேரணி, ஊர்வலம் செல்லம் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க கூடாது. ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைக் காவல்துறை விதித்துள்ளது. காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தவெக தலைவர் விஜய் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.