திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு; ஏடிஜிபி ஜெய்ராமிடம் சிபிசிஐடி விசாரணை!
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெய்ராமிடம் நான்கு மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏவான ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெய்ராம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏடிஜிபி ஜெய்ராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் திருவள்ளூர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிடப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்றைய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏடிஜிபி ஜெயராமுக்கு இதுவரை ஏன் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவில்லை எனவும் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் எனவும் கண்டிப்புடன் கூறிய நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஏடிஜிபி ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்மனின் அடிப்படையில் காஞ்சிபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெய்ராம் விசாரணைக்காக ஆஜராகினார். ஆஜரான அவரிடம் நான்கு மணி நேரமாக சிபிசிஐடி எஸ்பி ஜவகர் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
குறிப்பாக 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அதனை வீடியோ பதிவு மேற்கொண்டதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசு காரைக் கொடுத்திருப்பதாக இவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான பல்வேறு கேள்விகளை அவரிடம் சி பி சி ஐ டி போலீசார் கேட்டதாகவும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் காரைக் கொடுத்தார்? என்ன கூறி காரைப் பெற்றனர்? எந்த நோக்கத்துடன் காரைப் பெற்றனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.