அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. அழக்கப்பா கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் பயின்று வந்த கல்லூரி மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில், நாமக்கல்லை சேர்ந்த சபரீஸ்வரன்(19) என்ற மாணவன் விடுதியில் தங்கி பேச்சுலர் ஆஃப் லெதர் டெக்னாலஜியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் தங்கி இருந்த விடுதி அறையில் மொத்தம் நான்கு மாணவர்கள் தங்கிவந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை மற்ற மூன்று மாணவர்கள் கல்லூரிக்குச் சென்ற நிலையில் இவர் மட்டும் விடுயிலேயே தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில் மதிய இடைவேளையின்போது விடுதிக்கு வந்த மாணவர்கள் சபரீஷ்வரன் தங்கிருந்த அறைக்கதவை தட்டியபோது நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்து காவலாளிகளிடம் கூற, பின்னர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சபரீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து கோட்டூர்புரம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரீஷ்வரன், கடந்த பத்து நாட்களாகத் தனக்கு இங்குப் படிக்க விருப்பமில்லை எனவும் தான் பாதியிலேயே படிப்பை நிறுத்தப் போவதாகச் சக மாணவர்களிடம் சொல்லி வந்தது தெரியவந்துள்ளது.
இதனால் மன உளைச்சலிலிருந்து வந்த மாணவர் சபரீஷ்வரன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் இந்தக் கல்லூரியில் படிக்க விருப்பமில்லாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
( தற்கொலை எதற்கும் தீர்வல்ல... தற்கொலை தொடர்பான எண்ணங்களிலிருந்து விடுபடவும், ஆலோசனைகள் பெறவும் தமிழக அரசு நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தற்கொலை தடுப்பு உதவி எண் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண்ணிற்கு அழைக்கவும் - 044-24640050)