அதிகரிக்கும் வரதட்சணை புகார்... 20 பவுன் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல யூடியூபர்!
"டெக் சூப்பர் ஸ்டார்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் சுதர்சன், புதிதாக வெளியாகும் செல்போனின் சாதகம் பாதகம் குறித்து வீடியோ வெளியிட்டு சுதர்சன் யூட்யூபில் பிரபலம் அடைந்தார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்த சுதர்ஷன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த விமலா தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார்.
தேனி மாவட்டம் தேனி அருகே முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் விமலா தேவி (28) இவர் மருத்துவம் படித்து முடித்து மதுரையில் மருத்துவராக பணிபுரிந்த போது இருவரும் காதலித்த நிலையில்,
கடந்த 01.03.24 அன்று இரு வீட்டாரின் சம்மதத்துடன் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
30 பவுன் தங்க நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களை சுதர்சனின் தந்தை கேட்டதன் பேரில் பெண்ணின் வீட்டிலிருந்து வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சுதர்சன் தனது மனைவி விமலா தேவியுடன் மதுரையில் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளனர்
திருமணத்தின் போது சுதர்சன் தனியார் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்ததாகவும் அதன் பின்பு அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி "டெக் சூப்பர் ஸ்டார்" என்று சேனல் ஆரம்பித்து செல்போன் குறித்த ரிவ்யூகளை வீடியோவாக வெளியிட்டு தனியாக சேனல் நடத்தி வருகிறார்.
தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட 30 பவுன் நகை மற்றும் பணத்தை சேர்த்து சொந்தமாக வீடு கட்டி வந்ததாகவும் அதற்கான கடனை அடைக்க முடியாததால் சுதர்சன் குடும்பத்தினர் சிக்கலில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் சுதர்ஷன் விமலா தேவியிடம் நீ மருத்துவராக இருந்து எங்களுக்கு என்ன சம்பாதித்து தந்தாய் என்று கேட்டு விமலா தேவியை ஆபாசமாக பேசி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே விமலா தேவி கர்ப்பமாக இருந்ததால் அவரை அவரின் தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் பின் சுதர்சன் குடும்பத்தினரிடம் விமலா தேவியின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி அருகே வீரபாண்டியில் விமலா தேவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்ல சுதர்சனின் குடும்பத்தினரிடம், பெண்ணின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விமலா தேவியின் தந்தையிடம் மேலும் 20 பவுன் நகை கொடுத்தால்தான் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்வதாக கூறியதாக தெரிகிறது.
வரதட்சணையாக 30 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய், பணம் கொடுத்த பிறகும் மேலும் 20 பவுன் நகை கொடுத்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என சுதர்சனின் குடும்பத்தினர் வரதட்சனை கொடுமை செய்வதாக விமலா தேவி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது கடந்த 28 ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் யூடியூபர் சுதர்சன், மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் ஆடியோ வெளியீட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து வரதட்சணை புகார் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
தற்போது யூடியூபில் பிரபலமான டெக் ரிவியூரான சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை கேட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
in
தமிழ்நாடு